இறைதூதர் மூஸா (அலைஹிஸ்ஸலாம்) அவர்கள் ஃபிர்அவ்னிடம் இறைசெய்தியை எத்திவைத்தபோது ஃபிர்அவ்ன் மற்றும் மூஸா (அலை) அவர்களுக்கிடையே நடந்த உரையாடலில் குர்ஆன் குறிப்பிடுகிறது. قَالَ فِرْعَوْنُ وَمَا رَبُّ الْعٰلَمِيْنَؕ قَالَ رَبُّ السَّمٰوٰتِ وَالْاَرْضِ وَمَا بَيْنَهُمَاؕ اِنْ كُنْتُمْ مُّوْقِنِيْنَ அதற்கு ஃபிர்அவ்ன்: “அகிலத்தாருக்கு இறைவன் யார்?” என்று கேட்டான். அதற்கு (மூஸா) “நீங்கள் உறுதி கொண்டவர்களாக இருப்பின், வானங்களுக்கும், பூமிக்கும் இவ்விரண்டுக்குமிடையே உள்ளவற்றுக்கும் இறைவனே (அகிலத்தாரின் இறைவன் ஆவான்)” என்று கூறினார். (அல்குர்ஆன் 26: 23, 24) |
தன் உருவ அமைப்பைப் பற்றி ஆச்சரியப்படும் எந்த மனிதனுக்கும் தன்னுடைய உருவாக்கத்தில் எந்த பங்களிப்பும் இல்லை. தன் கரு அழிந்துவிடுமோ என்று அஞ்சி பேணுதலுடன் இருக்கும் எந்த தாய்க்கும் தன் குழந்தையின் கருவறை நிலைகள் தெரிய இயலாது. ஆனால் அங்கே நடக்கும் ஒவ்வொரு சலனங்களையும் தெள்ளத் தெளிவாக அறியக்கூடியவன் படைத்த இறைவன்! |
பூமியின் ஆழத்தில் அடர்ந்த இருளில் மறைந்திருப்பவற்றையும் அவன் அறிபவன்! காரிருளில் கறுப்பு நிறப் பாறையில் ஊர்ந்து செல்லும் கறுத்த எறும்பின் சலனத்தையும் தெளிவாகப் பார்ப்பவன்! |
மனிதனின் வரைமுறைக்குட்பட்ட அறிவைக்கொண்டு அல்லாஹ்வுடைய உள்ளமையை வரையறுக்க இயலாது. குர்ஆனிலும் நபிமொழிகளிலும் வந்துள்ளவற்றை அப்படியே ஏற்றுக்கொள்வதும் அவற்றை குறைபாடுகள் கொண்ட நமது அறிவின் எல்லைக்குள் விளக்கிக்கூற முடியாத நிலையில் ”அல்லாஹ்வே மிக அறிந்தவன்” என்று கூறுவதே அறிவுடைய முன்னோரின் பண்பாக இருந்தது. |
பிரபஞ்சத்தில் உள்ள எல்லா வஸ்துக்களின் படைப்பாளனும் காரணகர்த்தாவும் அல்லாஹ்வே!. பிரபஞ்ச படைப்பாளன் பிரபஞ்சத்தின் வரையறைக்கு அப்பாற்பட்டவன் என்பதே பகுத்தறிவுக்கு உகந்ததாகும். |
அல்லாஹ் தனது பண்புகளில் பூரணமானவன்! அவற்றில் அவன் படைப்புகளுக்கு ஒப்பாகாதவன்! |